பிச்சைக்காரன் . . .


கல்லூரிப் பெண்கள் 
கூட்டமாய் போகையில்
அவர்கள் கொடுக்கும் 
நக்கல் சிரிப்பு கலந்த 
காமெடிப் பார்வை . . . 

பசங்களெல்லாம் 
பொழுது போகவில்லை 
என்றால் எனை 
நோக்கி கிண்டலாய் 
பேசும் 
அழுக்கு வார்த்தை 

அம்மா இது யாரென 
குழந்தை கேட்கையில் 
புரியாத ஆங்கிலத்தில் 
அவள் எனை நோக்கி 
சொல்லும் 
ஏளனப் பேச்சு 

பணக்காரன் 
தன் அந்தஸ்தை
உயர்த்தி காட்ட 
தானே முன் வந்து 
கொடுக்கும் 
வரட்டு நன்கொடை 

எனக்கு இளையவன் 
நான் அவனைவிட
முதிர்ந்தவன் . . . !

தெரிந்தும் . . .

அவன் போட்டு கூப்பிடும் 
வாடா போடா
வார்த்தைகள்
இவைதான் எனது 
ஒரு நாள் நாட்குறிப்பு . . . 

முன்பின் தெரியாதவன் 
அறிமுகமில்லாதவன் 
போலீஸ் காரன் 
நகரத்து வெற்று தாதா 
கடைக்காரன் 
படித்தவன் 
பாமரன் . . . !

பெண்கள்
குழந்தைகள் 
இப்படி எல்லா 
வர்க்கமும் 
கோபித்தாலும் 
சந்தோசித்தாலும் 
உணர்வுகள் 
தீர்க்கப்பட 
அடியோ அவமானமோ 
வாங்குவது தான் 
"நான்" எனும் நூலின் 
பொருளடக்கம் . . . !

திருப்பியடிக்க முடியாத
திசையிலே 
என்வாழ்க்கை பயணம் 
ஆழ்கடலில் 
துடுப்பின்றி செல்கிறது 
கரை காண 
முடியவில்லையே என்ற
ஏக்கத்தில் . . . !

நடந்துவந்த பாதைகள் 
கடலாய் மாறிவிட்டது
என் கண்ணீர் கொண்டு. . .  

எத்தனை மனக்கோட்டைகள் 
நானும் கட்டினேன் 

நான் என்ன தீர்க்கதரிசியா ?
வர இருப்பதை 
முன்கூட்டி கணிக்க 

கடல் அலை போல் 
விபத்து நிகழ்வு
வரும் 
இந்த காலையும் 
கொண்டு செல்லும் . . . 
என்று தெரிந்திருந்தால் . . . 
கோட்டைக்கு பதில் 
ஆஸ்பத்திரி கட்டி இருப்பேன் . . . !

நான் இழந்தது 
ஒரே ஒரு கால் 
இங்கே 
கிடைத்து இருப்பதோ 
மூன்று சக்கரம் 
வாழ முடியாத 
தெரு வாழ்க்கை 
அவமானம் அருவருப்பு
அழுக்கு சட்டை . . . 

கண் சிமிட்டுவதட்குள்
காட்சி மாறியதுபோல் 
மனசாட்சி இல்லாத 
உலகுக்குள் 
நானும் வந்துவிட்டேன் . . . !

இயலாதவன் இறங்கி கேட்டால் 
பெயர் பிச்சை 
இயன்றவன் புடுங்கி தின்றால் . . ?

சறுக்கி விழுபவனுக்கு 
விழுமிடம் 
எல்லாம் கள்ளி மரம் 
எனும் கயவர்கள் 
இந்த உலகில் 
வளர்ந்து இருக்கும் போது .. .

முள் குத்தத் தானே செய்யும் . . .!

தெரிந்தும் 
இரத்தக் கரைகளோடு 
எழுந்திருக்கிறேன் 
வயிற்றுக்காக . . . 
எனக்குள்ளும் 
இதயம் இருப்பதால் . . . !

இந்த உடலை நம்பி என் உயிர் இருப்பதால் . . . !





2 comments:

  1. manathai kanneerakkum unmaiyana valiyil ungal kavithai varikal nanbarey....thodarunkal unmaikalai ungalin karpanaikalil...

    ReplyDelete
  2. nichchayam thozare en pani thodarum

    ReplyDelete