வறுமை


வறுமை வசதியாய் வாழ்கிறது 
ஏழையின் வீட்டில் . . . 

இவனுக்கு எதிர் வீட்டு 
ஜன்னல்கள் வலியே 
பார்த்தால் . . . 
ஏராளம் சட்டைகள் . . . 
இவனது சட்டையை 
பார்த்தால் . . .
ஏராளம் ஜன்னல்கள் . . . !

குழந்தை கூட 
வேலைக்கு செல்கிறது . . . 
குடிசை ஓட்டை 
அடைக்க வேண்டி . . . 

இது தானா . . . ?
தொழில் வாய்ப்பு . . . 

இல்லை 
நீங்கள் சொல்லும் 
சுய தொழில் 
அபிவிருத்தி . . .

துள்ளாத மாடுகளும் 
பொதி சுமக்கிறதே . . . 

நீர் அருந்திய 
ஏழையின் வயிற்றுக்கோ 
வறுமை தெரிவதில்லை . . . 
பணக்காரன் வயிற்றுக்கோ . . . ?

பசி பட்டினி தெரிவதில்லை . . . !

ஆட்சியில் உள்ளவன்
அதிகாரத்தில் இருப்பவன் . . .
தீட்டும் திட்டங்கள் தானா . . . ?
இந்த ஏற்றத் தாழ்வு . .



எத்தனை கனவுகள் கண்டிருப்பேன் !


எத்தனை கனவுகள் கண்டிருப்பேன் !

இந்த நிமிடம் வரை . . .
கற்பனைகளோடு . . .

ஆயிரம் ஆண்டுகள்
வாழ்ந்துவிட்டேன் உன்னோடு . . .

உயிரே !
இறைவன்
ஆரம்ப வரியில்
முற்றுப்புள்ளி இடுகிறானா . . .?

பூரித்து போயிருந்த
என் உள்ளம்
வாயடைத்து போனதடி . . .
தீயினை தந்து சென்றாய்
தங்க மலரே . . .
தாங்கலையே . . .

யார் நிழல் கூட
உனைத்தொட்டால்
அதைக்கூட தாங்கிக்கொள்ளேனே . . .
நொடிப்பொழுதில்
எனை விட்டு
எங்கே என் அன்பே சென்றாய் . . . ஐயோ !

செஞ்செளித்திருந்த
மலரைப்போல் . . .
என்னருகே அமர்ந்திருந்தாயே . . . !
அடுத்த நொடி
ஆகவில்லை . . .
அதற்குள்
ஆவியாகி சென்றாயே . . . !

நோயிலே இறந்திருந்தால் . . .
நியாயமென்று நினைத்திருப்பேன் . . .
நொடிப் பொழுதில் மறைந்ததனால்
நிலை குலைந்து போனேனே . . . !


பிச்சைக்காரன் . . .


கல்லூரிப் பெண்கள் 
கூட்டமாய் போகையில்
அவர்கள் கொடுக்கும் 
நக்கல் சிரிப்பு கலந்த 
காமெடிப் பார்வை . . . 

பசங்களெல்லாம் 
பொழுது போகவில்லை 
என்றால் எனை 
நோக்கி கிண்டலாய் 
பேசும் 
அழுக்கு வார்த்தை 

அம்மா இது யாரென 
குழந்தை கேட்கையில் 
புரியாத ஆங்கிலத்தில் 
அவள் எனை நோக்கி 
சொல்லும் 
ஏளனப் பேச்சு 

பணக்காரன் 
தன் அந்தஸ்தை
உயர்த்தி காட்ட 
தானே முன் வந்து 
கொடுக்கும் 
வரட்டு நன்கொடை 

எனக்கு இளையவன் 
நான் அவனைவிட
முதிர்ந்தவன் . . . !

தெரிந்தும் . . .

அவன் போட்டு கூப்பிடும் 
வாடா போடா
வார்த்தைகள்
இவைதான் எனது 
ஒரு நாள் நாட்குறிப்பு . . . 

முன்பின் தெரியாதவன் 
அறிமுகமில்லாதவன் 
போலீஸ் காரன் 
நகரத்து வெற்று தாதா 
கடைக்காரன் 
படித்தவன் 
பாமரன் . . . !

பெண்கள்
குழந்தைகள் 
இப்படி எல்லா 
வர்க்கமும் 
கோபித்தாலும் 
சந்தோசித்தாலும் 
உணர்வுகள் 
தீர்க்கப்பட 
அடியோ அவமானமோ 
வாங்குவது தான் 
"நான்" எனும் நூலின் 
பொருளடக்கம் . . . !

திருப்பியடிக்க முடியாத
திசையிலே 
என்வாழ்க்கை பயணம் 
ஆழ்கடலில் 
துடுப்பின்றி செல்கிறது 
கரை காண 
முடியவில்லையே என்ற
ஏக்கத்தில் . . . !

நடந்துவந்த பாதைகள் 
கடலாய் மாறிவிட்டது
என் கண்ணீர் கொண்டு. . .  

எத்தனை மனக்கோட்டைகள் 
நானும் கட்டினேன் 

நான் என்ன தீர்க்கதரிசியா ?
வர இருப்பதை 
முன்கூட்டி கணிக்க 

கடல் அலை போல் 
விபத்து நிகழ்வு
வரும் 
இந்த காலையும் 
கொண்டு செல்லும் . . . 
என்று தெரிந்திருந்தால் . . . 
கோட்டைக்கு பதில் 
ஆஸ்பத்திரி கட்டி இருப்பேன் . . . !

நான் இழந்தது 
ஒரே ஒரு கால் 
இங்கே 
கிடைத்து இருப்பதோ 
மூன்று சக்கரம் 
வாழ முடியாத 
தெரு வாழ்க்கை 
அவமானம் அருவருப்பு
அழுக்கு சட்டை . . . 

கண் சிமிட்டுவதட்குள்
காட்சி மாறியதுபோல் 
மனசாட்சி இல்லாத 
உலகுக்குள் 
நானும் வந்துவிட்டேன் . . . !

இயலாதவன் இறங்கி கேட்டால் 
பெயர் பிச்சை 
இயன்றவன் புடுங்கி தின்றால் . . ?

சறுக்கி விழுபவனுக்கு 
விழுமிடம் 
எல்லாம் கள்ளி மரம் 
எனும் கயவர்கள் 
இந்த உலகில் 
வளர்ந்து இருக்கும் போது .. .

முள் குத்தத் தானே செய்யும் . . .!

தெரிந்தும் 
இரத்தக் கரைகளோடு 
எழுந்திருக்கிறேன் 
வயிற்றுக்காக . . . 
எனக்குள்ளும் 
இதயம் இருப்பதால் . . . !

இந்த உடலை நம்பி என் உயிர் இருப்பதால் . . . !





கணவனே கேளடா !



பெண் எனும் 
பொக்கிஷம் . . . 
காதலித்து நீ பெற்ற 
காதலியானாலும் 
திருமணம் பேசி 
உன்னவளை 
இரு வீட்டார் 
மணக்க வைத்தாலும் . . 
திருமணக்கும் போது 
பெண்ணவள் மனைவி 
எனும் 
மகிமை பெறுகிறாள் . . .

நீ வாழ்ந்த கடந்த காலம் 
அவள் மறந்து விட்ட 
கஷாயம் . . .
இனிமேல் நீ 
அவளுக்காய் 
வாழ இருக்கும் 
காலம் அவள் 
சுவைக்க இருக்கும் தேன் . . .

தேக்கி வைத்த
மொத்த அன்பையும் 
அவள் அள்ளித்தர 
எதிர்பார்ப்பது 
உன்னிடம் . . . 
நீ அவள் இதயம் தாண்டி 
நேசித்தால் அன்றி  
பெற முடியாது 
அந்த பாசத்தை 
அவளிடம் . . .


அன்பு எனும் 
பெயரில் நீ இடும் 
கட்டளைகள்
அவள் எதிர் பார்த்த 
வாழ்க்கைக்கு 
நீ இடும் 
முட்டுக்கட்டைகள் . . . 
தேவை அறிந்து 
அவள் நடப்பாள் 
தேவை இன்றி 
நீ நடத்தாது இரு . . .
இது அன்பல்ல 
அடிமைத்தனம் . . . ! 


எதைவேண்டுமானாலும் 
அவளுக்காய் 
விட்டுக்கொடு 
எதுக்காகவும் 
அவளை விட்டுக்கொடுக்காதே . .
இந்த உலகில் 
நீ ஒரு 
ஆளாய் இருக்கலாம் . . . 
ஆனால் அவளுக்கு 
உலகமே 
நீயாய் இருப்பாய். . .


உன்னோடு மட்டுமே 
அவள் உடல் தாண்டி
உறவை பேணுவாள் . . . 
நீ அதற்கும் மேல் 
உயிர் தாண்டி 
உறவை பேணு . . .


சந்தேகம் எனும் பேய் 
சந்ததிக்கு கேடடா . . . 
சாமர்த்திய 
வாழ்வுக்காய் 
சாதிக்க தேவை 
இல்லை . . .
புரிந்துணர்வே 
போதும் . . . 
வாழ்க்கை சொர்க்கமாகும் . . .

அன்புடன்
அன்வாஸ் . . .  

வெளிநாட்டுக்காரன் வாழ்க்கை . . .


யாரைத்தான் விட்டது இந்த இக்கரைப்பச்சை . .
இந்த நாட்டுக்கு வந்தவனுக்கோ 
அக்கரை பச்சை . . . !

மறக்காமல் மேற்கொள்ளும் 
தொலைபேசி அழைப்பு . . . 
சொந்த பந்தங்களின் பரிதவிப்பு . .  
 விசா இல்லையா என விசாரிப்பு . . .
எண்ணிக்கை முடிந்தாலும் 
எம் எண்ணங்கள் முடிவதில்லை . . . !

அள்ளிப் பூசிக்கொண்ட 
நறுமணம் வாசனை தூக்குகிறது . . . 
இந்த வீணாய்ப் போன 
வாழ்வின் ஏக்கம் தெரியாமல் . . . !

எமது உறக்கமோ இறக்கமோ 
பந்தமோ பாசமோ 
விற்கப்படுகிறது வெளிநாட்டுக்காரன் 
கம்பனிக்கு . . . 
மாத இறுதியில் 
இந்த காசு கொண்டு மீட்க முடியாத 
துக்கம் மட்டும் அப்படியே இருக்கிறது . . . !

எதிர் கால இலட்சியங்களை 
4 மணி நேர விமானப் பயணத்தில்
தொலைத்து விட்டு . . . 
கானல் நீர் என்று 
தெரிந்த பின்பும்
நீச்சலடிக்க நினைக்கின்றோம் . . . !

வெள்ளிக்கிழமை தான் 
நிறுத்துகிறது . . . 
இயந்திரம்போல் மாறிவிட்ட 
இந்த வெளிநாட்டு வாழ்வை 
சனிக்கிழமை வந்து விட்டால் . . .  
சனியனும் வருகிறது
எம் நிம்மதி தொலைக்க . . . !

வீட்டில் போதும் என்றளவுக்கு 
உறக்கம் கொண்ட நாட்கள் 
இந்த அலாரம் 
மணியோசை கேட்கும் போது 
அடி நெஞ்சில் 
அனலாய் கொதிக்கிறது . . .

அன்பான அம்மா 
உயிரான நண்பர்கள் 
என் ஊரின் குட்டிச்சுவர் 
என் கிரிக்கட் மைதானம் . . . 
எல்லாமே ஓர் இரவுக் 
கனவினில் வந்து 
காணாமல் போகிறது . . . 

தூண்டல் கொண்டு 
நாம் பிடித்த ஜப்பான் மீன் . . . 
கரத்தை பயணம் . . .
ஆற்றங்கரையில் உட்கார்ந்து 
ஊர் பலாய் கழுவி
தின்று தீர்த்த
5 ரூபாய் மிக்சர் . . . ! 

5 மணியானால் 
கடமைபோல் எண்ணி
நாம் தரிசித்த 
மரவெள்ளி டேஸ்ட் கடை . . .

மீன் சீசனில் 
காசில்லாமல் மீன் வங்க சென்ற 
கடற்கரை . . . 
இலங்கன்றாய் பயமரியாது 
நாம் அடித்த கடல் 
நீச்சல் . . . !

பெருவெள்ளம் எடுத்து ஊரே 
துன்பமாய் இருக்கும் போதும் 
சந்தோசமாய் 
நாம் காணச் சென்ற
தண்ணீர் அளவு . . . 
முயல் வேட்டை . . . !

நோன்பு நேரத்து கஞ்சி .. . 
மழை நேரத்து வானவில் . . . 
பெருநாளில் பலகாரம் . . . 

இவைகளை நினைத்து பார்க்கும் போதெல்லாம் 
குடும்பச்சுமை வீட்டுக்கஷ்டம் எல்லாமே வந்து . . .
எம் கண்களை நனைத்து விடுகிறது . . .

பிறந்ததில் இருந்தே 
ஒன்றாய் வளர்ந்த நண்பனின் திருமணத்தில் 
மாப்பிள்ளைக்கு டை கட்டுதல் . . . 
கூடி நின்று கிண்டலடித்து 
செமையாய் வாங்கிக் கொண்ட 
சம்பவங்கள் . . . 
கல்யான சப்ளை நேரத்து பரபரப்பு . . . 
பெண்வீட்டில் மரியாதை 
குறைவு என்று 
வீண் பிடிவாதம் . . .
பெண் கூட்டம் தூர இருந்து 
எமக்கு கொடுக்கும் ஓரப்பார்வை . . . 
நான் தான் ஹீரோ என்று 
என்னும் அந்த 
காதல் பருவம் . . . 
ஒளிந்து ஒளிந்து ஜன்னல்வலியே 
நாம் கண்ட மணமகள் மினாரா . . . !

இவையெல்லாம் கிடைக்காமல் 
சம்பிரதாய அழைப்புக்காக 
சங்கடத்தோடு . . . 
தொலைபேசி வாழ்த்தினூடே 
தொலைந்துவிடுகிறது 
எம் அயல் தேசத்தில் எம் வாழ்வு . . . !

கோடி கோடியாய் 
சம்பாதிதாலும் 
நாங்களெல்லாம் இந்த 
அயல் நாட்டு அடிமைகள் . . . 
தொலைபேசியிலும் ஈ மெயிலிலும் 
வருகின்ற 
நண்பர்களின் உறவுகளின் 
மரணச்செய்திகளுக்கு . . . 
இந்த அராபிக்கடல் மட்டுமே ஆறுதல் . . . 

உயிரைத்தாண்டி பழகியவர்களெல்லாம் . . .
ஒரு துளி கண்ணீரில் 
கரைந்து விடுகிறார்களே . . . 
இந்த பாலாய்ப்போன 
வெளிநாட்டு 
வாழ்க்கயில் . . . !

இங்கு வருவதட்காக
இழந்ததையும் 
வந்ததனால் பெற்றதையும் 
கூட்டிக் கழித்துப் 
பார்த்தால் . . . 
எஞ்சுவது 
இழப்பு மட்டும் தான் . . . !

கிள்ளாச்சொல்லி 
தொலைபேசியில் 
குழந்தை அழும் சத்தம் கேட்கிறோம் . . 
உள்ளுக்குள்ளே நாம் 
அழும் சத்தம் 
யாருக்காவது கேட்கிறதா ?

விடுமுறையில் ஊருக்கு வரும் போது
வளர்ந்து விட்ட சின்னஞ்சிறுசுகள் . . . 
மாறிப்போன கலாச்சாரம் . . . 
நெருங்கியவர்களின் மறைவு 
புதிய முகங்களின் பிறப்பு . . . 
எனது ஊரை எனக்கே 
புரிந்து கொள்ளமுடியாத சூல் நிலை . . . 
இப்படி 
எல்லா மாற்றங்களையும் கண்டு . . .

மீண்டும் வெளிநாடே வேண்டாம் 
என அடம்பிடிக்கும் மனதிடம் 
கடனும் கஷ்டமும் வந்து 
ஆறுதல் சொல்லி 
மீண்டும் அனுப்பி விடுகிறது . . . 
இந்த வெளிநாட்டுக்கு . . .