என் கட்டார் கனவா !


கணவனோடு இரண்டு மாதம்
கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா ?

விட்டுக்கொடுத்து தொட்டுப்பிடித்து
தேவை அறிந்து சேவை புரிந்து
எனக்காக நீ உழைத்து...
உனக்காய் நான் விழித்து ..
நீ தாமதித்து வீடு வரும்போது நான் படும் தவிப்பு ..
எனக்காக நீ தூங்குவதாய் உன் நடிப்பு
வார விடுமுறையில் பிரியாணி
காசில்லா நேரத்தில் பட்டினி
காமம் மட்டுமின்றி ...
எல்லா உணர்ச்சிகளையும் பரிமாறிக்கொண்டோமே..!
ஏன் எனை விட்டு சென்றுவிட்டாய் ...


12 வருடம் ஒருமுறை குறிஞ்சிப்பூ !
5 வருடமொருமுறை ஒலிம்பிக் 
4 வருடமொருமுறை உலகக் கோப்பை கிரிக்கட் 
2 வருடமொருமுறை கணவன் !
நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய் ...

நீ வரும் இரண்டு மாத விடுமுறை 
இதில் ஆடம்பர உணவு உல்லாச பயணம் 
நீ எனைவிட்டு போகும் போது 
கானல் நீராய் மறைந்து விடுகிறது...
இந்த பாசாங்கு வாழ்க்கை புளித்து விட்டது !

தவணை முறையில் வாழ்வதற்கு 
வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?
எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன 
பருவ மழையா ?

விரைவுத் தபாலில் காசோலை வரும் 
காதல் வருமா?
பணத்தை தரும் இலங்கை வங்கி பாசம் தருமா ?

விமான நிலையத்தில் 
நீ எடுத்துச் சென்ற பொதியோடு 
ஏன் இதயம் ஒட்டியுருந்தது
அனுமதிக்கப்பட்ட எடையோடு 
அதிகமாக இருந்ததாலோ 
அங்கேயே விட்டு விட்டாய் 
என்னையும் என் இதயத்தையும் ....

நீயோ சென்றது பாலைவனம்...
ஆனால் வரண்டதோ என் வாழ்வு ..
பரிதாபம் புரியாமல் 
ஈச்ச மரப்பக்கம் நின்று 
புகைப்படம் எடுத்து அனுப்புகிறாய் !
உன் கட்டார் வாழ்க்கையில் 
நீ தேடியது பணமாக இருக்கலாம்...
நான் தொலைத்தது 
என் வாழ்க்கை அல்லவா !

விளித்திடு கனவா விளித்திடு !
அந்தக் கடவுச் சீட்டு வேண்டாம் கிழித்திடு !
விசாரித்து விட்டு போகாதே ..
விசா ரத்து செய்து விட்டு வா 
வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்....

No comments:

Post a Comment